439. IPL கிரிக்கெட்டில் நேற்று!
முந்தைய பதிவில் உம்மாச்சியை வேண்டிக் கொண்டதன் தொடர்ச்சியாக நேற்றைய (ஜெயிக்க வேண்டிய) IPL ஆட்டத்தில், மும்பை அணி தனது "முழுத்திறமையையும்" வெளிப்படுத்தி, ராஜஸ்தான் ராயல் அணியிடம் தோற்றது. சச்சினின் ஜாதக ராசி அப்படி, அவர் இந்தியாவுக்கு ஆடினாலும் சரி, மும்பைக்கு ஆடினாலும் சரி, அவர் ஓரளவு நன்றாக ஆடினால், அந்த ஆட்டம் கோவிந்தா தான் ;-)
சில தினங்களுக்கு முன் மொஹாலி அணியிடம் ஒரு ரன்னில் தோற்ற மும்பை அணி, நேற்று கடைசிப் பந்தில் ஆட்டத்தை கோட்டை விட்டது. 3 ஓவர்களில் 43 ரன்கள் தேவை என்ற நிலையில், பரபரப்பு காட்டாமல், சிறப்பாக ஆடிய நீரஜ் பட்டேலையும், ரவீந்திர ஜடேஜாவையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்! கடைசி ஓவரை ஜெயசூர்யாவோ, ஆஷிஷ் நெஹ்ராவோ வீசியிருந்தால், மும்பை வெற்றிக்கு வாய்ப்பு இருந்திருக்கும் என்பது என் எண்ணம். Retrospective Analysis-இல் எ.அ.பாலாவை மிஞ்ச ஆள் கிடையாது என்று யாரோ முணுமுணுப்பது காதில் கேட்கிற மாதிரி இருக்கிறது :)
இந்த மும்பைத் தோல்வியால் தில்லி அணிக்கு லாபம், அவ்வணி அரைஇறுதி சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது !!! சேவாக் வார்னுக்கு நன்றிக்கடன் பட்டவராகி விட்டார் :) இப்போது, அரைஇறுதி சுற்றில் நான்காவது அணியாக தேர்வாகப் போவது சென்னையா, மும்பையா என்பது தான் கேள்வி! இன்றைய ஐதரபாதுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை வெற்றி பெற்றால், மும்பைக்கு (அவ்வணி தனது அடுத்த ஆட்டத்தில் வென்றாலும்!) சங்கு ஊதப்படும்!
சச்சினும், மும்பையும் இருக்கிற கடுப்பில், பெங்களூருக்கு எதிரான இறுதி ஆட்டத்தில், பெங்களூரை மும்பை மிதித்துத் தேய்த்து விடும் அபாயம் இருப்பதால், மும்பை பெங்களூரிடம் தோற்று அதனால் சென்னை அணி அரைஇறுதிக்கு தகுதி பெறும் என்று நம்புவதைக் காட்டிலும், "நம் கையே நமக்குதவி" என்ற பழமொழிக்கு ஏற்ப, இன்றே ஐதரபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வென்று சென்னை தகுதி பெறுவதே சிலாக்கியமான ஒன்றாகத் தோன்றுகிறது.
மேலும், லட்சுமி ராய் ஆட்டத்தைப் பார்க்க இன்று ஐதரபாத்துக்கு செல்ல மாட்டார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன ;-) அதனால், கேப்டன் தோனி கவனம் சிதறாமல் ஆடி, சென்னை அணிக்கு வெற்றிக் கனியை பறித்துத் தருவார் என்ற நம்பிக்கை துளிர்க்கிறது :)
எ.அ.பாலா